ஞாயிறு, 9 டிசம்பர், 2012

சிலம்பம்

அவர்கள். 
இதை பதிவு செய்தமைக்காக அவருக்கு நன்றியும் 
உங்களிடம் இந்த பதிவையும் விடுகிறோம்...
 
தமிழரின் பழமை வாய்ந்த விளையாட்டுகளில் பல்லோராலும் பரவலாக அறியப்பட்டிருக்கின்ற விளையாட்டு சிலம்ப விளையாட்டாகும். இவ்விளையாட்டானது ஆண்களுக்கு உரிய விளையாட்டாகும். 
 
இவ்விளையாட்டு பரத நாட்டியத்தோடு ஒத்துபோகிறது என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். 
பழங்காலத்தில் மலைவாழ் மக்கள் விலங்குகளை வேட்டையாடவும், கொடுவிலங்குகளின் தாக்குதலை எதிர்கொள்ளவும் 
கம்புகளைக் கருவியாகப் பயன்படுத்தியிருக்கின்றனர். 
இதுவே, பின்னர் சிலம்பக் கலையாக வளர்ச்சிப்பெற்று வந்திருக்கின்றது. 
 
மேலும் இதுபற்றி தெரிந்துகொள்ள... 
 
 http://tamilaalayam.blogspot.in/2009/05/blog-post.html

திங்கள், 3 டிசம்பர், 2012

கலைமணி நாட்டிய தாரகை பவாணி குகப்பிரியா


தமிழ் mirror இணைய இதழுக்காக கொழும்பு இராமநாதன் இந்து மகளீர் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றும் நாட்டிய கலைமணி நாட்டிய தாரகை பவாணி குகப்பிரியா அவர்களிடம் சகோதரி க.கோகிலவாணி அவர்களின் கேள்விக்கான பதிலாய் தன்னுடைய பதிவை இருக்க பற்ற வைத்திருக்கிறார் சகோதரி பவானி குகப்ரியா. அவற்றில் சிலவற்றை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.


கேள்வி:- பரதக் கலையின் தற்போதைய நிலை குறித்து கூறுங்கள்?

பதில்:- இறைவனை அடைவதற்கு சிறந்ததொரு வழியாகவே கலைகளென்பது உருவாக்கப்பட்டுள்ளன. இதில் பரதக் கலையென்பது மிகவும் தூய்மையான கலையாக ஆரம்பக் காலங்களில் காணப்பட்டது. இறைவன் லயித்திருக்கும் இடமான ஆலயத்தில் இறைவனுக்கு முன்பாக ஆடப்பட்டதே இந்தக் கலை. உள்ளத்தில் உறைந்திருக்கும் இறைவனை அடைவதற்காக அன்று தேவனுடைய அடியார்களால் இறைவனின் பாதங்களில் இந்தக் கலை சமர்பிக்கப்பட்டது.

ஆரம்பக்காலத்திலே இருவேறு விதமானவர்கள் இந்தக் கலையை ஆடினார்கள். ஆலயங்களில் இறைவனின் திருவுருவத்திற்கு முன்பாக ஒருசாராரும், தனது வயிற்றுப் பிழைப்பிற்காக இன்னொரு சாராரும் இந்தக் கலையை ஆடினார்கள். கால மாற்றத்திற்கேற்ப இந்தக் கலையிலும் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.

ஆலயங்களில் புனிதம் காத்தவர்களும், வயிற்றுப் பிணியை நோக்க பிழைப்பிற்காக  இந்தக் கலையை கையிலேந்தியவர்களும் ஒன்றாக கலந்துபோக இந்தக் கலை களியாட்டக் கலையாக மாறிப்போனது. இந்தக் கலையின் நோக்கம் பிழைத்துப்போனது.

வெறும் கவர்ச்சிக் கலையாகவும்,  ஆடவர்கள் முன் ஆடும் கலையாகவும் இந்தக் கலையை மாற்றிவிட்டனர். தற்போது எதற்காக பரதத்தை ஆடுகின்றோம் என்ற நியதிகள் இல்லாமலேயே பரதத்தை ஆடுகின்றவர்கள்தான் எம்மில் அதிகம். பரதம் பயிலும் மாணவர்களிடம் பரதம் குறித்து ஒரு கேள்வியை கேட்டாலும் விழி பிதுங்க முழிக்கின்றார்கள்.

எதற்காக இந்தக் கலையை கற்றுக்கொண்டீர்கள் என்று வினவினால் 'எனது அம்மாவிற்கு விருப்பம்,  எனது பெரியம்மாவிற்கு விருப்பம், அதனால் கற்றுக்கொண்டேன்' என்று கூறுகின்றார்கள். பெற்றோர்களோ 'எனது பிள்ளை பரதம் பயில்கின்றாள், அரங்கேற்றம் முடித்து விட்டாள்' என்று சமூகத்துக்கு கூறிக்கொள்வதனூடாக தமது அந்தஸ்தை வெளிப்படுத்துபவர்களாக காணப்படுகின்றார்கள். எனவே அந்தஸ்தை வெளிப்படுத்தவும்,  களியாட்டக் கலையாகவும் இந்த புனிதமான பரதக் கலை மாறிப்போனது. முற்றுமுழுதாக விழுமியங்கள் மழுங்கடிக்கப்பட்ட கலையாக தற்போது எம் முன் இந்த பரதக்கலை விளங்குகின்றது. இது இன்றைய காலகட்டத்தில் பரதத்தின் நிலையாக காணப்படுகின்றது.


கேள்வி :- பரதம் என்பது நம் நாட்டினது பாரம்பரியக் கலையல்ல. அது பாரதத்திலிருந்து எடுத்து வரப்பட்ட கலை என்று ஒரு மேடைப் பேச்சில் கூறியிருந்தீர்கள். அப்படியென்றால் நம் நாட்டிற்குரிய கலையெது?

பதில் :- ஒவ்வொரு பிரதேசத்தவர்களும் தமது சமூகத்திற்கு ஏற்ப, தமது கலாசார விழுமியங்களுக்கேற்ப ஒவ்வொரு கலையை உருவாக்கிக்கொண்டார்கள். அந்தக் கலைகள் அந்த பிரதேசத்தின் விழுமியங்களை, கலாசாரங்களை, பண்பாடுகளை வெளிப்படுத்தி நிற்கின்றன. இந்தவகையில் பாரதத்தை எடுத்துக்கொண்டால் அங்குள்ள ஒவ்வொரு மாநிலத்தவர்களும் தமக்கென ஒரு கலையை உருவாக்கிக் கொண்டார்கள். தாங்கள் நீண்ட காலமாக பின்பற்றி வந்த சமயம், சடங்கு, கலாசாரம் என்பவற்றை உள்ளடக்கி தமக்கென தனித்துவமான ஒரு கலையை உருவாக்கிக்கொண்டார்கள்.

இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது கேரள மாநிலம்தான். ஏனெனில் கேரளா மாநிலமானது கலையை பாதுகாப்பதிலும், ஒரு கட்டுக்கோப்புடன் அதனை வழங்குவதிலும்,  பல புதிய கலைகளை அறிமுகப்படுத்துவதிலும் பெயர்போன மாநிலமாகும். இந்த மாநிலம்தான் கதகளி, மோகினி ஆட்டம் போன்ற ஆட்டவகைகளை உருவாக்கியது. அண்மையில் கூட 'கூடி ஆட்டம்' என்ற ஓர் ஆட்டவகையை இந்த மாநிலம் அறிமுகப்படுத்தியுள்ளது. உண்மையை கூற வேண்டுமென்றால் ஒரு சிறிய மணற்பரப்பைக் கொண்டதுதான் இந்த மாநிலாம். அவர்களால் இத்தனை கலைகளையும் அவர்களுக்கே உரிய கலாசாரஇ, பண்பாட்டு, விழுமியங்களுடன் அமைத்துக்கொள்ள முடியும் போது ஏன் எம்மால் முடியவில்லை? நமக்கே உரிய தனித்துவமான கலையெங்கே?

எமக்கென்ற நீண்ட பாரம்பரியத்தை கொண்ட கலைதான் இந்த நாட்டுக் கூத்து மரபு. இந்தக் கலைகூட ஆரம்பக் காலகட்டத்தில் பாரதத்திலிருந்து இங்கு எடுத்து வரப்பட்டதுதான். ஆனால் அந்தக்கலையை நம் மூதாதையர்கள் எமக்கே உரிய தனித்துவமான கலையாக வடிவமைத்து எடுத்துக்கொண்டார்கள். அதற்கென ஆட்டமுறைகள், மேடை வடிவமைப்புகள், ஆடையமைப்புகள் என்ற பல அம்சங்களை கொடுத்து அதனை எமக்கே உரிய கலை வடிவமாக அமைத்துக்கொண்டார்கள்.

இதேபோல பரதக் கலையும் அங்கிருந்து கொண்டு வரப்பட்டாலும் அந்தக் கலை இங்கு மிக வேகமாக வளர்ச்சி கண்டது. எனவே இந்த இரு கலைகளையும் அடிநாதமாக வைத்துக்கொண்டு அவை இரண்டிலும் இருந்து ஒரு புதிய கலைவடிவத்தை பிரசவிக்க வேண்டும்.

உண்மையில் பாரதத்தவர்கள் பரத சாஸ்திரம் என்ற ஒன்றை வைத்துக்கொண்டுதான் பல ஆட்டவடிவங்களை உருவாக்கியுள்ளனர். எனவே நாமும் நமக்குள்ள வளங்களை பயன்படுத்திக்கொண்டு எமக்கான ஆட்டவடிவத்தை பிரசவிக்க வேண்டும்.


கேள்வி:- இவ்வாறு புதிதாக பிரசவிக்கப்படும் அந்த ஆட்ட வடிவம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில்:- நாம் உருவாக்க போகும் அந்த ஆட்ட வடிவமானது எமது தமிழர்களின் சமய, பண்பாட்டு, கலாசார, விழுமியங்களை தெளிவாக வெளிப்படுத்தி நிற்கக் கூடியக் கலையாக இருக்கவேண்டும். இந்தக் கலைக்கு பொதுவாக நாம் 'ஈழத்து ஆடல்' எனும் நாமத்தை சூட்டிக்கொள்வோம்.

இலங்கையில் எம் தமிழர்கள் பரந்துபட்டு வாழ்கின்றார்கள். வடக்குத் தமிழர், கிழக்குத் தமிழர், மலையக தமிழர், கொழும்பு தமிழர் என ஒவ்வொரு பிரதேசத்திலும் வாழும் எமது இனத்தவர்கள் தமக்கென ஒரு கிராமிய கலை வடிவத்தை உருவாக்கி வைத்துள்ளார்கள். மலையகத்தில் 'காமன் கூத்து', கிழக்கில் 'தென்மோடி', வடக்கில் 'வடமோடி', மன்னாரில் 'காத்தவராயன் கூத்து'  என ஒவ்வொருவரும் தமக்கான கிராமிய ஆட்ட வகைகளை கொண்டுள்ளனர். 

இவற்றுக்கென ஆட்ட வடிவங்களையும் அவர்களே உருவாக்கியுமுள்ளனர். எனவே இவற்றை பிரதிபலிக்க கூடிய வகையில் நாம் புதிதாக உருவாக்கும் ஆட்டவடிவம் அமையவேண்டும். பரதத்தில் அதிகமாக கர்நாடக இசையையே பயன்படுத்துகின்றார்கள். நாங்கள் அப்படியில்லாமல் முற்றுமுழுதாக தமிழிசையை பயன்படுத்த வேண்டும். இதுபோன்ற சிறிய சிறிய விடயங்களில் கூட முற்றுமுழுதாக நாம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த கோரிக்கை வெற்றியடைய நிச்சயமாக கூட்டு முயற்சியே தேவைப்படுகின்றது.

கேள்வி:- கிராமிய கலையென்பது பொதுவாக இழிவுநிலைக்குட்படுத்தப்பட்ட கலையாகவே சமூகத்தில் பார்க்கப்பட்டு வந்தது. பரதத்தின் வருகையுடன் அந்தக் கலை முற்று முழுதாக வீழ்த்தப்பட்டு போய்விட்டது. ஏன் இவ்வாறான ஒரு நிலை இந்தக் கலைகளுக்கு ஏற்பட்டது?

பதில்:- ஆரம்ப காலம் தொட்டே இந்த கிராமியக் கலைகள் என்பது சாதியத்துடன் பின்னப்பட்டே காணப்பட்டது. கிராமியக் கலைகளில் பாத்திரமேற்கும் வாத்திய கலைஞர்கள் கீழ் சாதி மட்டத்தினரை சேர்ந்தவர்களாகவே காணப்பட்டார்கள். உதாரணத்திற்கு பறையடிப்பவர்கள். 

உயர்சாதியினர் இவ்வாறான பாத்திரங்களை ஏற்றால் அது உயர் சாதிக்கு இழிவை ஏற்படுத்துவதாகவே காணப்பட்டது. காலப்போக்கில் இவ்வாறான இந்த கிராமிய கலைகளில் பாத்திரமேற்பவர்கள் தம்மை சமூகம் இழிவாக கருதி விடும் என்பதற்காகவே தமது உயிர் கலைகளை விட்டுக்கொடுக்க தொடங்கினார்கள். பாடத்திட்டத்தை மட்டும் அடிப்படையாக கொண்ட கல்வி முறையில் இவ்வாறான தாழ்த்தப்பட்ட சாதியமைப்பைச் சேர்ந்தவர்கள் தாங்கள் என்னதான் கஷ்டபட்டாலும் தங்களது பிள்ளைகளையாவது பல்கலைகழகத்திற்கு அனுப்பிவிட வேண்டும் என்ற நோக்கில் அதற்காக உழைக்கத் தொடங்கினார்கள். 

ஒரு பிழைப்பாக இதனை மேற்கொண்டவர்கள் காலப்போக்கில் வருமானம் பற்றாமல் போக முற்றுமுழுதாக இந்தக் கலையை கைவிட்டார்கள். அந்தஸ்துக்குரிய கலையாக சமூகத்தில் மாறிபோன பரதக்கலையை தமது பிள்ளைகளும் பயில வேண்டும் என்று எண்ணத் தொடங்கினார்கள். 'என் மகள் வெளிநாட்டில் சென்று அரங்கேற்றம் முடித்திருக்கிறாள்'; என்று கூறுவதை அவர்கள் பெரும் அந்தஸ்தாக கருதினார்கள். இது கிராமியக் கலைகளுக்கு பெரும் சவாலாக அமைந்துபோனது. சாதிப்பிரச்சினையே இந்தக் கலைகள் அழிவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

கேள்வி:- கிராமியக் கலை வடிவங்களான கூத்துக்களை தற்போதைய இளம் சந்ததியினர் ஏன் உள்வாங்கிக்கொள்ள மறுக்கின்றனர்?

பதில்:- உண்மையில் கூத்துக்கள் இளைஞர்கள் மத்தியில் பெரியதொரு வரவேற்பை பெறவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வளர்ந்த சமுதாயம் அந்த கிராமிய அளிக்கைகளை சரியான முறையில் அவர்களது கைகளில் ஒப்படைக்க தவறிவிட்டது. ஒரு பிள்ளையின் வளர்ச்சியில் தீயது காணப்படுமாயின் அது பெற்றோரின் வளர்ப்பில் தங்கியுள்ளது. பெற்றோர் எதனை வெளிப்படுத்துகின்றார்களோ அதனையே பிள்ளையும் உள்வாங்கும். அதேபோன்றுதான் வளர்ந்த சமுதாயம் எந்தவிதத்தில் கூத்தை இளைஞர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியதோ அதைதான் கூத்துக் குறித்து பிரதிபலிப்பவர்களாக இன்றைய இளம் சமுதாயத்தினர் காணப்படுகின்றனர். 

மற்றுமொரு விடயம் கூத்தில் நிபுணத்துவம் அற்ற கலைஞர்கள் உள்வாங்கப்பட்டிருப்பது. பொதுவாக கூத்தை நெறிப்படுத்தி நடத்தி செல்பவர் மது அருந்திவிட்டு கூத்தை அளிக்கைச் செல்வது,  பொருத்தமற்ற வேஷக் கட்டு போடுவது,  சமூகத்தில் நல்ல ஒழுக்க நெறியை பின்பற்றாதது,  இவை காலங்காலமாக கூத்தை நெறிப்படுத்தியவர்கள் விட்ட பிழைகளாக காணப்படுகின்றன. மீண்டும் மீண்டும் குருமார்கள் செய்த பிழை மாணவர்கள் மத்தியில் தாக்கம் செலுத்த தொடங்கியது. கூத்துக்கு மரியாதை கொடுக்கப்படுவதில்லையென்றால் அங்கு கூத்து முறையாக வழங்கப்படவில்லையென்றே அர்த்தம். 

கேள்வி:- கலைகளை வளர்ப்பதற்கு இதுவரை நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் குறித்துக் கூறுங்கள்.

பதில்:- பாடசாலைகளில் கூத்துப்பட்டறைகளை நடத்துகின்றேன். இதில் நல்ல விழுமியங்களை, பண்பாடுகளை அந்த மாணவர்களுக்கு வழங்குகின்றேன். பல புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன். அதனை எதிர்வரும் கலைவிழாவின் போது மேடையேற்றவுள்ளேன். வேலானந்தன் ஆசிரியருடன் இணைந்து வெளிநாட்டில் சென்று செய்வதற்கு எனக்கு ஒரு செயலமர்வு கிடைத்தது. அந்த செயலமர்வில் நமது நாட்டில் காணப்படும் புகழ்பெற்ற தளங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட பாடலுக்கு பரதமும் இல்லாமல் கூத்தும் இல்லாமல் ஒருவகை நடனத்தை மேடையேற்றினேன். கனடாவிற்கு சென்றபோது இந்த நடனத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே புதிய நடன வகையை ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சி 5 வருடங்களுக்கு முன்பிலிருந்தே நாங்கள் ஆரம்பித்துவிட்டோம். 

(நன்றி : தமிழ் mirror இணைய இதழ் ) நேர்காணல் :- க.கோகிலவாணி
படங்கள் :- குஷான் பதிராஜ

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

நாட்டுப்புறவியலில் நடவுப் பாடல்கள்


 
முன்னுரை
மனித இனம் தோன்றிய அன்றே நாட்டுப்புற இலக்கியங்களும் தோன்றிவிட்டன. நாட்டுப்புற வழக்குகள் பற்றி அறிவியல் அடிப்படையில் ஆராயும் இயல் நாட்டுப்புறவியலாகும். மண்ணின் மைந்தர்தம் மனக்கருவறையில் கருக்கொண்டு உருப்பெற்று உயிர் பெற்று உலா வரும் உள்ளத்தின் உண்மையான வெளிப்பாடுகளே நாட்டுப்புற இலக்கியங்கள். நாட்டுப்புற மக்களின் பழக்கவழக்கங்களையும், பண்பாடுகளையும், நம்பிக்கைகளையும், இலக்கியங்களையும் ஆராயும் இயலே நாட்டுப்புறவியலாகும். ஒரு நாட்டின் வாழ்வையும், வரலாற்றையும், குறையையும், நிறையையும் தெளிவாகக் காட்டுவன நாட்டுப்புற இலக்கியங்கள். மக்களின் பண்பாடு, பழக்க வழக்கங்கள், பழமையான எண்ணங்கள் ஆகியவற்றை வெளிப்படையாகக் காட்டும் கண்ணாடியாகும்.
நாட்டுப்புறவியலை நாட்டுப்புற இலக்கியம், கலை என்ற பிரிவினுள் அடக்குகின்றனர்.

எழுதப்பெற்ற இலக்கியம் "காலம் காட்டும் கண்ணாடி" என்றால் நாட்டுப்புற இலக்கியம் சமுதாயத்தைக் "காட்டும் கண்ணாடி" எனலாம். நாட்டுப்புற இலக்கியம் கிராமப்புற மக்களின் அனுபவங்களை மட்டுமின்றி அவர்களது உணர்வுகளையும் பிரதிபலித்து நிற்கின்றது. நாட்டுப்புற இலக்கியமானது மனித சமுதாயம் எதை அனுபவித்ததோ எதைக் கற்றதோ அதைக் குவித்து வைத்திருக்கும் சேமிப்பு அறையாகும். நாட்டுப்புற மக்களால் பாடப்படும் பாடல்கள் நாட்டுப்புறப் பாடலாகும். நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புற மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளன. மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள நிகழ்வுகள் நாட்டுப்புறப்பாடலின் பொருளாகின்றன.

நாட்டுப்புறப் பாடல்களின் வேறு பெயர்கள்

மக்களின் வாழ்க்கை தாலாட்டுப் பாடலில் தொடங்கி விளையாட்டு, காதல் பாடல்களில் வளர்ந்து, திருமணப் பாடலில் நிறைவெய்தி, ஒப்பாரிப் பாடலில் முடிவடைகின்றது. இன்ப துன்பங்களைப் பற்றி மக்களே பாடுவதால் இதனை மக்கள் இலக்கியம் என்றும் கூறுவர். நாட்டுப்புறப் பாடல்களை இயற்கைப் பாடல்கள் எனலாம். மேலும் இதனை, 1. நாட்டுப்புறப்பாடல் 2. நாடோடிப் பாடல் 3. நாட்டார் பாடல் 4. வாய்மொழிப் பாடல் 5 பாமரர் பாடல் 6 பரம்பரை பாடல் 7. கிராமியப் பாடல் 8. கல்லாதார் பாடல் 9. மக்கள் பாடல் 10. ஏட்டில் எழுதாப் பாடல் 11. மலையருவி 12. காட்டுப்பூக்கள் 13. வனமலர் 14. காற்றிலே மிதந்த கவிதை என்றும் அழைக்கின்றனர்.
இப்பாடல்கள் இலக்கண வரம்பிற்கு உட்படாமலும் இருக்கும். எனவேதான் நாட்டுப்புறப் பாடல்களைத் தாமதமாக மலர்ந்து மணம் வீசும் காட்டு மலருக்கும் மலையினின்று விழும் அருவிக்கும் ஒப்பிடுகின்றனர். இதனை ஒரு சிறகில்லாப் பறவைகள் எனவும் கூறுவர்.

நாட்டுப்புறப் பாடல்களின் வகைகள்

நாட்டுப்புறப் பாடல்களை ஆசிரியர்கள் பல்வேறு வகைகளாக வகைப்படுத்துகின்றனர். அவற்றுள் 1. தாலாட்டுப் பாடல்கள் 2. குழந்தைப் பாடல்கள் 3. காதல் பாடல்கள் 4. தொழில் பாடல்கள் 5. கொண்டாட்டப் பாடல்கள் 6. பக்திப் பாடல்கள் 7. ஒப்பரிப் பாடல்கள் 8. பன்மலர்ப் பாடல்கள் எனப் பலவகைகள் உள்ளன.

நடவுப் பாடல்கள்

தமிழர்கள் உழவுத் தொழிலைத் தொடக்கக் காலம் முதல் செய்து வருகின்றனர். சங்க நூல்களிலும், காப்பியங்களிலும், திருக்குறள்களிலும், உழவுத் தொழில் பற்றிய செய்திகள் நிரம்ப உள்ளன. இன்றைய அறிவியல் உலகில் உழவுத் தொழிலில் பல புதுமைகளும், மாற்றங்களும், நடந்து வருகின்றன. உழவுத் தொழிலில் உழுதல் முதல் விளைந்தவற்றை வீட்டிற்குக் கொண்டுவருவதுவரை எனப் பலதரப்பட்ட தொழிலின் போதும் பாடல்கள் பாடப்படுகின்றன. நடவுப் பாடல்கள் என்பவைப் படிப்பறிவு இல்லாத உழவுத் தொழிலை முதன்மையாகக் கொண்டு வாழும் மக்களால் பாடப்படுகின்றன. நடவுப் பாடல்கள் என்பவைப் பெண்கள் வயல்வெளிகளில் நடவு செய்யும் பொழுது பாடப்படும் பாடல்களாகும். நடவுப் பாடல்களைப் பெண்கள் தனியாகவும் குழுவாகவும் பாடுகின்றனர். இப்பாடல்கள் பெரும்பாலும் பாடுவோரின் குரல் வளத்தால் முதன்மை பெறுகின்றன.

நடவுப் பாடல்களின் உள்ளடக்கம்

நடவுப் பாடல்கள் என்பவை பெண்களால் பாடப்படுவதால் பெண்களின் துன்ப வாழ்க்கையும், அவல நிலையும் இவற்றுள் மிகுதியாக உள்ளன. இவை தவிர இறைமை, சமூகநிலை, அரசியல், கேலி, நாத்தி - மாமி கொடுமை, பெற்றோர் பாசம், அண்ணன் தங்கை உறவு மேன்மை முதலியனவும் குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வொரு பாடலும் நெஞ்சை வருடச் செய்யும் காட்கிகளையும் நினைவுகளையும் கண் முன் கொணர்கின்றன. வானொலி தொலைக்காட்சி வழியும் பாடல்கள் பரவுகின்றன.

நடவுப் பாடல்கள் பாடப்படுவதற்குக் காரணம்

நடவுப் பாடல்களைப் பாடுவதற்குக் காரணம் களைப்புத் தெரியாமல் இருப்பதற்கு என்று பலரும் குறிப்பிடுகின்றனர். எனினும் பெரும்பாலான வயல்வெளி உரிமையாளர்கள் பாடக்கூடியவர்களுக்கு ஊதியம் அதிகம் தருவதும் உண்டு. இவ்வூதியம் பணம், நெல், உணவு என ஏதாவது ஒன்றாக இருக்கும். பிற பெண்கள் பாடல்களைக் கற்றுக்கொள்ளத் தூண்டுவதும் ஒரு காரணம் ஆகும். தங்களின் குரலை வளப்படுத்திக் கொள்ளவும் இப்பாடல் பயிற்சி உதவும்.

நடவுப் பாடல்களில் சமூக நிகழ்வுகள்

1. கணவன்மார் கொடுமை

நடவுப் பாடல்கள் சமூகத்தில் நிலவும் பழக்க வழக்கங்களைப் பதிவு செய்யும் ஆவணம் போல் உள்ளன. குடிகாரக் கணவனின் கொடுமை தாளாமல் ஒரு பெண் அரளி விதையை அரைத்துக் குடித்து இறக்க நினைக்கின்றாள். இதனைப் பாடும் பாடலில் அரளிக் கொட்டையை எவ்வாறு உண்பது என்பதையும் அவ்வாறு உண்டால் அவளின் இறப்பிற்கு பின்பு எத்தகு மருத்துவ ஆய்வுகள் நடக்கும் என்பதையும் ஒரு நடவுப் பாடல் தெரிவிக்கின்றது. இம் மருத்துவ ஆய்வில் அதிகாரிகளின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதையும் இப்பாடல் தெளிவுபடுத்துகின்றது.

"வீட்டிலியே சண்மையாகி னன்னானே னானேன்னனே
போறாளடி ரோட்டுப்பக்கம் னன்னானே னானேன்னனே
அங்கிருந்து போனானே னன்னானே னானேன்னனே
பறிச்சாளாம் அரளிக்கொட்டை னன்னானே னானேன்னனே
அரைச்சாளம் அம்மியிலேயும் னன்னானே னானேன்னனே
காச்சி குடிச்சாளம் னன்னானே னானேன்னனே"

இப்பாடலில் சிற்றூர்ப்புறப் பெண்களின் அவல வாழ்வும் அவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்களும் காணப்படுகின்றன.

விரும்பிய கணவன் கிடைக்காத நிலையில் தன் சோக வாழ்க்கையின் முடிவை எண்ணி எண்ணி வருந்தும் ஒரு பெண்ணின் நிலையை,

"கோவ இலபறிச்சி - எம்மா
கொறடு வச்ச திண்ணக்கட்டி
குந்துலாம் என்றிருந்தேன்
கொலகாரனா எங்கிருந்தான்" (னன்னானே)
என்ற பாடல் புலப்படுத்துகிறது.
மாமியார்களின் கொடுமை
நடவுப் பாடல்களில் பெரும்பாலும் மாமியார்கள் கொடுமைக்காரர்களாகவே காட்டப்படுகின்றனர். தாய்க்கும் மனைவிக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் ஆடவனின் நிலையையும் ஒரு பாடல் கூறுகின்றது.

"புல்லு நல்லா எம்மா - நல்ல புல்லு - எம்மா நல்ல புல்லு என்
புருசனும் தான் எம்மா - நல்லவரு - எம்மா - நல்லவரு
புருசனதான் எம்மா - பெத்தமாமி - எம்மா - பெத்தமாமி
பேய் குரங்கு எம்மா அலையுறாளே - எம்மா - அலையுறாளே"
இப்பாடலில் தன் கணவனை உயர்வாகவும், மாமியைக் கருங்குறத்தி, பேய் குரங்கு என இழித்தும், பழித்தும், பேசுவதைக் காணலாம்.
வரதட்சணை கேட்கும் மாமியார் குடும்பத்தையும் எண்ணெய் அடுப்பு கொண்டு அச்சுறுத்தும் மாமியையும் நடவுப் பாடலில் காணமுடிகின்றது.

"நூறுவகை சீதனமாம்
நீ எனக்கு எடுத்துவச்ச
பேராசை புடிச்ச கூட்டம் எம்மா - என்ன
பிச்சிப்புடுங்கி எறியுதே எம்மா - எம்மா (னன்னானே)
ஸ்டவ் அடுப்பு முதல் கொண்டு
நீ எனக்கு எடுத்துவச்ச
இங்கு ஒரு ஸ்டுவ் அடுப்பு எம்மா என்
மாமி வாங்கி வச்சிருக்கா எம்மா எம்மா" (னன்னானே)
நாத்திமார்களின் கொடுமை
மருமகள் உறவுடைய பெண்களுக்கு நாத்திகளாலும், அண்ணன் மனைவியர்களாலும் இடையூறுகள் ஏற்படுகின்றன என்று நடவுப் பாடல்களில் காணப்படுகின்றது.

"ஆத்துக்கு அந்தாண்டியும்
அண்ணன் வச்ச தென்னம்புள்ள
ஆறு நெநக்கிலியே - எம்மா
அண்ணன் குர கேக்கலியே எம்மா" - (னன்னானே)
அண்ணன் - தங்கை பாசம்
நடவுப் பாடல்களில் பெரும்பாலும் அண்ணன் தங்கை பாசம் சிறப்புடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

"என்னானே னானேனேன்னே
னானேன்னனே னானேனன்னே
கொண்ட கொண்ட மப்பெறங்கிக்
கொடுக்காமூல மின்னமின்னி (னன்னானே) (குழு)
கொட்டுதடி கோடை மழை
கொல்ல தண்ணி வெளியே போக (னன்னானே) (குழு)
காட்டுயான உழுது வர
கள்ளர்மக்க தென தெளிக்க" (னன்னானே) (குழு)

தாய்ப்பாசம்

இந்த உலகில் எந்தப் பொருள் பெற்றிருந்தாலும் தாய் இல்லையெனில் எந்தப் பயனும் இல்லை. தாயை எண்ணியெண்ணி ஏங்கும் பெண்குரலைப்,
"பட்சிகளே பறவைகளே அம்மம்மா
பட்சடையும் தோப்புகளாம்
பட்சடையும் தோப்புலேயும் அம்மம்மா
பறிச்சி திங்க கனியில்லையோ
பறிச்சி திங்க கனியில்லையா - அம்மம்மா
பாவம் தீக்க அம்மா இல்லயோ" (னன்னானே)

காதல்

நடவுப் பாடல்களில் காதல் செய்திகளும் பாடப்படுகின்றன.
 "அத்த பெத்த சின்னப் பொண்ணே
ஆசை வச்சன் வாமயிலே
கொத்தவரம் கொல்லையிலே
கூட தாமும் பேசிடுவோம்
நன்னே னன்னே னானே னன்னே"

முடிவுரை

நடவுப் பாடல்கள் அடித்தட்டு மக்களின் உள்ளத்து உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதோடு பழந்தமிழ் மக்களின் இசையுணர்வினை அறிந்து கொள்ளவும் பயன்படுகின்றன. வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளால் நம் மரபுச் செல்வங்கள் அழிந்து விடாமல் காப்பது நம் கடமையாகும்.

நன்றி
வேர்களைத் தேடி

அழியா கிராமியக் கலைகள்

 

நன்றி:சசிகலா - தென்றல் (இணைய பக்கம்) 

http://veesuthendral.blogspot.in/2012/04/blog-post_13.html


கரகாட்டம் ...
தலைமேல் செம்பு சூடி 
கை கொண்டு ஏந்தாமல் 
உடலை வில்லாய் வளைத்து 
ஆடுகின்ற கரகாட்டம் 
ஆரம்ப நாட்களில் 
ஆண்களின் ஆட்டக்கரகமாய் 
துளிர்விட்டு பின்னாளில் 
மங்கையரின் ஆட்டமாகி 
இது வரை அழிவின்றி 
வாழுகின்ற தமிழ்க்கலையாய்...

மயிலாட்டம் ...
மயில் போன்ற முகமூடி 
இடுப்பினிலே தோகைகள்
வான்பார்த்து சிலிர்த்தெழுந்து 
தோகை மயிலாடுதல் போல்
உச்சி முதல் பாதம் வரை 
இரைதேடி ஓடுதல் போல் 
அசைக்கின்ற பொழுதினிலே 
அழகுமயில் நேரினிலே 
ஆடுதல் போல் கம்பீரம் ...

காவடி ஆட்டம் ...
அரைவட்ட வில்லாக வளைத்தெடுத்து 
நடுவிலொரு கம்புகட்டி 
காவடியை அலங்கரித்து 
கவிபாடி ஆடுகின்ற 
காவடி ஆட்டமதை
முருகனின் ஆட்டமென்ற 
முன்னுரையோடு ஆடிடுவர் 
ஆனாலும் 
வழிபாட்டு ஆட்டம் தனி 
கலை ஆட்டம் ஆறு பாகம் ...

பொய்க்காலாட்டம் ...
கொக்கலி ஆட்டமென்ற 
உயரக்கால் ஆட்டத்தில் 
பொய் கால்களைப் பூட்டி 
கொக்கின் கால் போல் 
நீண்ட கட்டையோடு 
ஆறடி உயரம் வரை 
ஆகாயத்தில் நின்றாடும் 
ஆட்டமிது தமிழன் கலை ...

தெருக்கூத்து ....
திருக்கூத்து என்ற கலை 
காலத்தின் பிடியில் சிக்கி 
தெருக்கூத்தாய் நிற்கிறது 
கலைஞ்ரின் வாழ்வாதாரம் போல் 
ஆடல் நாயகன் சிவபெருமான் 
தில்லையில் ஆடியத்   தெருக்கூத்து 
பார்த்தாடியதால் பரவசமாய் 
பாரதக் கூத்தென்ற கதை 
சொல்லும் திரு - தெருக்கூத்து ...
        

சனி, 1 டிசம்பர், 2012

இசைக்கருவி



இசைக்கருவிகளை பற்றிய லேசான தொடு உணர்வை நாம் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காக...



தமிழர்களின் ஆத்மார்த்த இசையான பறை இசையை பார்க்க https://www.youtube.com/watch?v=wg1OqIQ29A8



புல்லாங்குழலை பற்றி சிறிய துணுக்குகளை தெரிந்துகொள்ள
https://www.youtube.com/watch?v=TJ2V8rDXMG4



வயலின்  இசைக்கருவியை பற்றிய வரலாற்றை தெரிந்துகொள்ள
https://www.youtube.com/watch?v=SM1rfs2QE4g