செவ்வாய், 27 நவம்பர், 2012

அழிந்து வரும் கலைகள்


அழிந்து வரும் கலைகள் பற்றி அவ்வபோது வாய் பேச்சோடு முடித்துவிட்டு போய்விடுகிற நாம் அதன் வளர்ச்சியை பற்றி மீண்டும் துளிர் விட செய்ய என்ன செய்கிறோம் எனும் கேள்வி நம் தலையை குடைந்துகொண்டிருக்கிறது. ஏதோ நம் தாய் கலைகள் எனும் ஏக்க பெருமூச்சு ஒன்றை மட்டுமே காற்றில் கலந்து விட்டு போகிற நம்மால் ஏன் நம் நாட்டுப்புற கலைகளை மீட்டெடுக்க முடியாது. நம்மால் முடியும் நிச்சயமாக. நாம் அதையும் ஒருநாள் பார்க்கத்தான் போகிறோம். அதற்க்கு முன்பு நாம் கவனிக்க வேண்டிய சில கலைகளை இங்கு பார்ப்போம்.



வில்லுப்பாட்டு


இக்கலை பத்து நூற்றாண்டுகளுக்கும் மேற்பட்ட பழமைவாய்ந்தது. தமிழகத்தின்
தென்மாவட்டங்களான குமரி,நெல்லை மாவட்டங்களில் ' வில்லிசை ' அல்லது ' வில்லுப்பாட்டு ' மிகப் புகழ்பெற்ற கலையாக உள்ளது. சிற்றூர்களில் உள்ள தெய்வங்களுக்கு வழிபாடு நடத்திக்' கொடை விழா ' எடுக்கும்போது தெய்வங்களின் வரலாறுகள், தெய்வநிலை பெற்ற வீரர்களின் வரலாறுகள் ஆகியவற்றை மக்களிடம் எடுத்துச் சொல்ல இக்கலை பெரிதும் பயன்படுகிறது.

வில்லை முதன்மைக் கருவியாகவும், உடுக்கு, குடம், தாளம், கட்டை ஆகியவற்றைத் துணைக்கருவிகளாகவும் கொண்டு இக்கலை நடத்தப்படுகிறது. இந்த இசைக்குழுவின் முதல்வராக அமர்ந்து கதைபாடுபவர் ' புலவர் ' எனப்படுவார். அவர் கதை சொல்வதிலும், பாட்டுப் பாடுவதிலும், நடிப்பதிலும், காலத்திற்குத் தக்க அரசியல், பொருளாதார, சமூக அடிப்படையிலான் நகைச்சுவைத்துணுக்குகள் சொல்வதிலும் வல்லவராக இருப்பார். மரபு வழியிலமைந்த தென்மாவட்ட வில்லுப்பாட்டுகளில் புகழ் பெற்றது ' ஐயன் கதை ' எனப்படும் ' சாஸ்தா கதை ' யாகும். இதிகாசம், புராணம் தொடர்பான கதைகள், சமூகப் பாங்கான கதைகள் எனப் பல கதைகள் இன்றும் குமரிமாவட்ட சிறுகோயில்களில் வில்லிசை நடைபெறுவதைக் காணலாம்.
 
 
 




கணியான் கூத்து


குமரி, நெல்லை மாவட்டங்களில் சிறந்து விளங்கும் மற்றொரு கலை இந்தக் கணியான் கூத்து. இதற்கு ' மகுடாட்டம் ' என்ற மற்றொரு பெயரும் உண்டு. சுடலைமாடன் பாட்டு முதன்மையாகவும் அம்மன் பாட்டு அடுத்த நிலையிலும் இதில் இடம்பெறுகின்றன. இக்கூத்தில் தலைமைப் பாடகர், உதவிப் பாடகர், மகுடக்காரர் மூவர், பெண் வேடக்காரர் இருவர் என ஏழு பேர் பங்கேற்பர். இதில்
மகுடம், சலங்கை போன்ற இசைக்கருவிகள் இடம் பெறும்.

மகுடம் பெரிதும் வாசிக்கப்படுவதால் இதற்கு மகுடாட்டம் என்ற பெயர் வந்தது. பூவரசு, வேப்பமரக் கட்டைகளைக் கொண்டு செய்யப்படும் இந்த மகுடத்தில் எருமைத்தோல் போர்த்தப்படுகிறது. தலைமைப்பாடகர், பின்பாட்டுக்காரர், மகுடக்காரர்கள் ஓர் அரைவட்டமாகவும், பெண் வேடதாரிகள் ஓர் அரைவட்டமாகவும் அமைந்து ஒரு முழுவட்டம் கூத்தில் உருவாகிறது. இதனை நாடகம் சார்ந்த கூத்து எனவும் கூறுவர்.
 


பிற கூத்துகள்



நெல்லை மாவட்டத்தில் கரகாட்டம், ஆலி ஆட்டம், ஒயிலாட்டம், களியாட்டம், பெருமாள் ஆட்டம், நால்வர் ஆட்டம், மாடு ஆட்டம், குறவன்-குறத்தி ஆட்டம், காளி ஆட்டம், தோற்பாவைக் கூத்து போன்ற பல கலைகள் நடத்தப்படுகின்றன. அவற்றுள் ஆலி ஆட்டம், பெருமாள் ஆட்டம், தோற்பாவைக் கூத்து ஆகியன மெல்ல அழிந்துவருகின்றன.

அரசு இவற்றை உடனடியாகக் கவனித்து நிதியுதவி செய்து வாழவைக்க வேண்டும். இவற்றில் நாதஸ்வரம், உறுமி, பம்பை, தவில், சுருதிப்பெட்டி, வில், கோல், கிளாரினெட் போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. மதுரை மாவட்டத்தில் கரகம், வட்டத்தப்பு, குறவன்-குறத்தி, ராஜா ராணி, நால்வர் ஆட்டம், மாடு ஆட்டம், பபூன், காவடிஆட்டம், பொய்க்கால்குதிரை ஆட்டம், தேவராட்டம், ஒயிலாட்டம் முத்லியன நடத்தப்படுகின்றன. இவற்றுள் கரகம், காவடிஆட்டம், தோற்பாவைக் கூத்து ஆகியன அழியத்தக்க நிலையிலுள்ளன.


தெருக்கூத்து

தமிழகத்தில், எல்லாக் கிராமங்களிலும் தெருக்கூத்து இன்றும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோடைப்பருவத்தில் கோவில் விழாக்களில் தெருக்கூத்து நடைபெறுவதை இன்றியமையாத ஒன்றாக மக்கள் கருதுகின்றனர். இரவு நேரங்களில் கோயிலருகே அமைந்திருக்கும் பெரியவெளி அல்லது நாற்சந்திகளில் கூத்து நடத்தப்படும். தெருக்கூத்தில் ஆடுவதற்கு பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. முகத்தில் அரிதாரம் பூசிக் கொண்டு தலை, தோள், மார்பு, கைகள் ஆகியவற்றில் மரக்கட்டையால் ஆன அணிகலங்களை அணிந்து கொள்வர். கூத்தைச் சொல்லிக்கொடுக்கும்' வாத்தியார் ' நடனமுறைகள், ராகதாள வகைகளையும் சொல்லிக்கொடுப்பார்.

தெருக்கூத்தில் மிக முக்கியமான ஒருவர் ' கட்டியங்காரன் ' ஆவார். இவருக்கு ' பபூன், விதூஷகன், சூத்திரகாரி 'போன்ற வேறு பெயர்களும் உண்டு. திரைக்குப்பின்னால் இருந்து தன்னைப் பற்றிப் பாடிய பின், திரை விலக்கப்பட்டு,அன்றைய தெருக்கூத்துக் கதையைச் சொல்லுவது, சிறிய பாத்திரங்களைத் தானே ஏற்பது, கூத்தை முடித்து வைப்பது போன்ற பணிகளை இவர் செய்வார்.

தெருக்கூத்துக் கலைஞர்கள் வெண்பா, விருத்தம், அகவல் போன்ற பாக்களையும்
நாட்டுப்புறச் சிந்து வகைகளையும் பாடவல்லவர்களாய் இருப்பார்கள். இசைக்குழுவில் மிருதங்கம், சுருதிப்பெட்டி, தாளம், முகவீணை போன்ற இசைக்கருவிகள் இருக்கும். தெருக்கூத்து மற்ற நாட்டுப்புறக் கலைகள் போல் பொழுதுபோக்குக்காக ஆடப்படாமல், பக்தியைப் பரப்புவதற்காக ஆடப்படுகின்ற தெய்வீகக் கலையாகும். தமிழகத்தின் தெருக்கூத்து ஆந்திரத்தின் வீதி ' நாடகத்தையும், கர்னாடகாவின் ' யட்ச்கான 'த்தையும் ஒத்திருக்கிறது.

இத்தகைய நாட்டுப்புறக் கலைகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருகின்றன. இருப்பவற்றை அழியாமல் காப்பதற்கு , இப்பொழுது தமிழக அரசு உதவியுடன் , " சங்கமம் " போன்ற விழாக்களைத் தமிழர்த்திருநாள் அன்று நடத்திவருகிறது. அரசுடன் சேர்ந்து நாமும், நமது பாரம்பரியக் கலைகளை அழியாமல் காப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக