திங்கள், 26 நவம்பர், 2012

குத்தாட்டத்துக்கு பாதுகாப்பா?


கிராமிய கலைகள் பெயரில் குத்தாட்டத்தை அரங்கேற்றும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்து வருகின்றது. மண் மனம் மாறாத கிராமங்களில் திருவிழா மற்றும் பண்டிகை காலங்களில், கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. காலப்போக்கில், கிராமிய கலை நிகழ்ச்சிகள் பெயரில், குத்தாட்டத்தை புகுத்தி, கலாச்சார சீரழிவை அரங்கேற்றுவது பெருகி வருகிறது. மனித ஒழுக்கத்தை கேள்வி குறியாக்கும், இத்தகைய குத்தாட்ட நிகழ்ச்சிகளுக்கு, மக்கள் மத்தியில் ஆதரவு இருப்பதோடு, கலைஞர்களும், விழா கமிட்டியினரும், அதற்கு தூண்டுகோலாக இருந்து வருகின்றனர்.




சேலம் மாவட்டத்தில் குத்தாட்டங்களுக்கு, போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டுள்ள போதிலும், கிராமிய கலை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்று தெரிவித்து, நீதிமன்ற அனுமதியுடன், போலீஸ் பாதுகாப்பு கோரப்படுகிறது. இரவு நேரத்தில் போலீஸ் பாதுகாப்புடன் துவங்கும் கிராமிய கலை நிகழ்ச்சிகள், நள்ளிரவை நெருங்கும் போது, குத்தாட்டமாக மாறி விடுகின்றன. ஆடைகளை குறைத்து, அங்கங்களை காட்டி, ஆபாச ஆட்டத்தை அரங்கேற்றுகின்றனர்.

இது, இளவட்டங்களை மட்டுமின்றி, பெரிசுகளையும் ஆட்டம் போட வைக்கிறது. எல்லை மீறும்போது, வம்பு சண்டை ஏற்பட்டு, சட்டம்- ஒழுங்கு பாதிக்கும் நிலை உருவாகி விடுகிறது. இத்தகைய போக்குகளால், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொம்பலாட்டம், குறவன் குறித்தி ஆட்டம் போன்ற கிராமிய கலை நிகழ்ச்சிகள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.அதனால், கிராமிய கலை நிகழ்ச்சி பெயரில் அரங்கேற்றப்படும் குத்தாட்டங்களுக்கு, போலீஸ் உடந்தையாக இருக்கக்கூடாது. குத்தாட்ட நிகழ்ச்சிகள் நடத்துபவர்களை கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராமிய கலைகள் என்னும் பெயரில் நடக்கும் குத்தாட்ட நிகழ்ச்சியை எந்த கிராமத்திலும் அரங்கேற்றக் கூடாது. குத்தாட்டம் நடத்துவது தெரிந்தால், நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவருடன், கலைஞர்களையும், அதே இடத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். கலைகளின் ஆத்மாவை பாதுகாக்க இதை விட்டால் வேறு வழியில்லை. கலைஞர்களும் பொருளாதார சீர்கேட்டால் கலைகளை தவறாகவும் பயன்படுத்தக்கூடாது. அதுதான் நாம் கலைகளுக்கு செய்யும் சிறந்த மரியாதையாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக