வியாழன், 29 நவம்பர், 2012

எழுத்தாளர் எஸ். பாலபாரதி சொல்லும் கும்மி

எழுத்தாளர் எஸ். பாலபாரதி அவர்கள் கும்மியின் சுவடுகளை நம்முன் எடுத்து வைப்பதை நான் உணர்ந்த வாறே நீங்களும் உணர வேண்டும் என்கிற முனைப்போடு அண்ணாரின் பதிவை உங்களுக்கும் பகிர்கிறேன். மத்திய தர மக்களின் மன நிலையை படம் பிடிக்கிறார். காலத்தால் அழிக்கமுடியாத கிராமிய கலைகளை நாமே மேற்க்கத்திய மோகத்தால் அழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் உணர்ந்து எப்போது திருந்துவது?


(நன்றி: எஸ்.பாலபாரதி)

“கும்மி” என்ற சொல்லாடலை நாம் இழிவு படுத்துகிறோமா?

னிய நண்பரும் சகபதிவருமான இவான் ”பதிவர்கள் மத்தியில் பிரபலமாக பயன்படுத்தப்படும் ‘கும்மி’ என்ற சொல்லாடலும் அதன் தாக்கங்களும்” என்ற பதிவினை எழுதி இருக்கிறார். அதில் கும்மி என்ற சொல்லாடலை நாம் ஒன்றுக்கும் உதவாது என்ற முடிவுக்கு வந்து, அதன் காரணமாகவே பயன்படுத்துவதாகவும், அழிந்து வரும் கலைகளில் கும்மியும் இருப்பதால் அதன் மீது மோசமான ஒரு பிம்பம் எழுவதற்கு நாம் காரணமாகி விடக்கூடாது என்றெல்லாம் எழுதி இருக்கிறார்.

அப்படி எல்லாம் எந்தவொரு உள்நோக்கமும் இன்றியே இன்று வரை பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. உண்மையில் கும்மி  என்பது  தமிழ்ச்சாமிகள்  சார்ந்து  ஆடப்படும்  ஒரு ஆட்டமாக இன்றும்  தென் மாவட்டங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முளைப்பாரி வளர்த்து ஒரு வாரம் நடக்கும் நிகழ்ச்சியில் ஆண்கள் ஒயில் ஆட, பெண்கள் குழு கும்மி அடித்து ஆடும். இதில் வயது பாகுபாடெல்லாம் கிடையாது. என் அம்மாச்சியும் ஆடியிருக்கிறாள்கூடவே, என் அம்மாவும். இவர்கள் இருவருடனும் என் அக்காவும் ஆடி இருக்கிறாள். இங்கே கவனிக்க வேண்டிய அம்சம் எதுவெனில்.. இந்த ஒயில், கும்மியாட்டம் என்பது மத்தியதர, கடைநிலை சாதியர்களின் ஆட்டமாகவே இருந்து வந்திருக்கிறது.

 எந்தவொரு உயர்சாதியினரும் இந்த ஆட்டத்தை ஆடுவதில்லை. உழைக்கும் மக்களின் களைப்பு தீர ஆடிப்படும் நிகழ்வாகவே இதனை பார்ப்பதும் உண்டு. திருவிழா அல்லாத சமயங்களில் வெறும் பெண்களின் களைப்பு நிவர்த்தி பாடலுடன் நின்று போகும். ஆண்கள் வஸ்தாவியின் ஒயில் வகுப்புக்கு போவதை வழக்கமாக இன்றும் பல பகுதிகளில் கொண்டுள்ளனர். (என்னுடைய ”கோட்டி முத்து” கதையில் இது பற்றி எழுதிய நினைவு இருக்கிறது.)

ஆண்களின் ஓயில் ஆட்டத்தை விட, பெண்களின் கும்மியாட்டம் அதிக பார்வையாளர்களை கொண்டதாகவும், சுவையான இசை வடிவமாகவும் இருந்து வந்துள்ளது. பெண்களின் ஆட்டத்தை காண கூடும் கூட்டத்தினால் வெறுப்புற்ற ஆண்வர்க்கம். ஒரு உத்தியை கையாண்டது. ஒயில் பக்கம் அதிக பார்வையாளர்களை திருப்புவதற்கு ஒரு குழுக்களிடையே போட்டிகள் வைத்து, கிராம அளவில் அதை வணிகப்படுத்தியது. சின்ன சின்ன ஸ்பான்சர்களைப் பிடித்து, ஒயில் போட்டியினை நடத்தத்தொடங்கியது. ஒயிலை வணிகப்படுத்தும் வேலைகள் வெற்றியடைந்தபின் தான் கும்மியின் பக்கம் பார்வையாளர்கள் கூட்டம் குறையத்தொடங்கியது என்பது உண்மை.

”ஆனை வாரதப் பாருங்கடி- அது
அசைச்சு வாரத்தப்பாருங்கடி..” என்ற பிரபலமான கும்மிப் பாடலே இளையராஜாவால் சினிமாவுக்கு கடத்திவரப்பட்டு,
“ஆயிரம் தாமரை மொட்டுக்களே- வந்து
ஆனந்த கும்மி தட்டுங்களேன்” என்று உருமாற்றமாகி, பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. (கிராமிய இசை வடிவங்களில் இருந்து சினிமாக்காரர்கள் களவாடிய மெட்டுக்கள் குறித்து தனி புத்தகமே போடலாம்)

என் அம்மாச்சி தொடங்கி என் அக்காள் வரை ஆடிய கும்மியை மீட்டு எடுத்து, மீண்டும் ஆடவைக்க முடியாவிட்டாலும்…, நினைவிலாவது இந்த பெயரை வைத்திருக்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கமின்றி வேறு எந்தவொரு நோக்கமும் இல்லை என்று நிச்சயமாக நம்பலாம்.
நீங்கள் குறிப்பிட்டது போல கும்மி ஆட்டம் என்பது ஒன்றுக்கும் உதவாதது என்று ஆண்களாலும், உயர்சாதியினத்தவராலும் பரப்பப்பட்ட பொய்யன்றி வேறெதுமில்லை என்பதையும் உணர்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக