புதன், 28 நவம்பர், 2012

பழைய நாடக வகைகள்

நாடகமும் கூத்தும்

 உலக நாடகங்களை ஆராய்ச்சி செய்தவர்கள் இருபெரும் பிரிவுகளில் நாடகங்களை அடக்கிக் காட்டுவர். அவை,
1. இன்பியல் நாடகங்கள்
2. துன்பியல் நாடகங்கள்
     
         மகிழ்ச்சியான நிலையில் நாடகம் முடிவுற்றால் இன்பியல் நாடகம் என்றும் துயர முடிவைக் கொண்டிருந்தால் துன்பியல் நாடகம் என்றும் நாடகங்களைப் பிரித்துக் காட்டினர்.

தமிழ் நாடகங்களிலும் பிற இந்திய மொழி நாடகங்களிலும் துன்பியல் முடிவு என்பது விரும்பி ஏற்றுக் கொண்ட ஒன்று அன்று. இந்திய நாடகங்கள் பெரும்பாலும் இன்பியல் முடிவைக் கொண்டவையாகவே இருக்கும். இருபதாம் நூற்றாண்டில் மேனாட்டு நாடகச் செல்வாக்கு இந்தியாவில் ஏற்பட்ட பின்னர்தான் துன்பியல் முடிவுகள் நாடகங்களில் பரவின. 

பழைய நாடக வகைகள்

பழைய தமிழ் நாடகங்களும் இருபதாம் நூற்றாண்டு நாடகங்களும் வேறு வகையான பிரிவுகளைக் கொண்டிருந்தன. தமிழ் நாடகங்களைப் பொறுத்தவரையில் பழந்தமிழ் உரையாசிரியர்கள் பின்வருமாறு வகைப்படுத்தினர். அவை,

1. வேத்தியல்
2. பொதுவியல்

அரசர்களும் அரசர்களை ஒத்த பெரியவர்களும் காணும் நாடக வகை வேத்தியல். பொதுமக்கள் காண்பதற்குரிய நாடக வகை பொதுவியல்.

இந்த நாடகம் அல்லது கூத்து வகைகளை இன்னும் நுட்பமாகச் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் பகுத்துக் காட்டுகிறார்.

வசைக் கூத்து - புகழ்க் கூத்து
வரிக் கூத்து - வரிசாந்திக் கூத்து
சாந்திக் கூத்து - விநோதக் கூத்து
ஆரியக் கூத்து - தமிழ்க் கூத்து
இயல்புக் கூத்து - தேசிக்கூத்து
என்பன அடியார்க்கு நல்லார் வகைப்படுத்தும் பத்துக் கூத்து வகைகள்.
இருபதாம் நூற்றாண்டு நாடக வகைகள்

 
மேடை நாடகமே தம் வாழ்வின் பெரும்பணி என்று செயல்பட்டவர் அவ்வை தி.க. சண்முகம். அவர், மேடை நாடகங்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம் எனக் கூறுகிறார்.
 
“தமிழ் நாடகங்களைப் பல்வேறு வகைகளாகப் பிரிக்கலாம். புராண நாடகம், பக்தி இலக்கிய நாடகம், வரலாற்று நாடகம், கற்பனை நாடகம், பக்தி இலக்கிய நாடகம், சமுதாய நாடகம், சமுதாயச் சீர்திருத்த நாடகம், தேசிய நாடகம், நகைச்சுவை நாடகம் என நாடகங்களை இவ்வாறு பலவகைப்படுத்திப் பார்க்க வேண்டும். இந்த நாடகங்களோடு பிரச்சார நாடகம் என்னும் ஒரு பிரிவையும் சேர்த்துக் கொள்ளலாம்” என்று கூறுகிறார்.

1. புராண நாடகம்
சிவலீலா, கிருஷ்ணலீலா, சக்திலீலா, மகாபாரதம் போன்றவை புராண இதிகாச நாடகங்கள்.
2. வரலாற்று நாடகம்
இராஜராஜ சோழன், வீரபாண்டிய கட்டபொம்மன், தஞ்சை நாயக்கர் தாழ்வு, இமயத்தில் நாம் போன்றவை வரலாற்று நாடகங்கள்.
3. கற்பனை நாடகம்
இரண்டு நண்பர்கள், லீலாவதி, சுலோசனா, வேதாள உலகம் போன்றவை கற்பனை நாடகங்கள்.
4. பக்தி நாடகம்
நந்தனார், சிறுத்தொண்டர், பிரகலாதன், மார்க்கண்டேயர் போன்றவை பக்தி நாடகங்கள்.
5. சமுதாய நாடகம்
உயிரோவியம், வேலைக்காரி, நாலுவேலி நிலம், டம்பாச்சாரி விலாசம் போன்றவை சமுதாய நாடகங்கள்.
6. சீர்திருத்த நாடகம்
அந்தமான் கைதி, இரத்தக் கண்ணீர், இழந்த காதல், வாழ்வில் இன்பம் போன்றவை சமுதாயச் சீர்திருத்த நாடகங்கள்.
7. நகைச்சுவை நாடகம்
சபாபதி, பிரசிடெண்ட் பஞ்சாட்சரம், துப்பறியும் சாம்பு, ஒரு சொந்த வீடு வாடகை வீடாகிறது போன்றவை நகைச்சுவை நாடகங்கள்.
8. பிரச்சார நாடகம்
பதிபக்தி, ஐம்பதும் அறுபதும், விலங்கு மனிதன், காகிதப் பூ போன்றவை பிரசார நாடகங்கள்.
இலக்கிய நாடக வகைகள்

மேடையில் நடிக்கப்பெறும் நாடகங்களை வகைப்படுத்துவதைப் போல் இலக்கியமாக எழுதப்பெறும் நாடகங்களை இருவகையில் பிரிக்கலாம். அவை,
1) உரைநடை நாடகங்கள்
2) செய்யுள் நாடகங்கள்

இந்த இருவகை நாடகங்களும் நடிப்பதற்கும் படிப்பதற்குமாக எழுதப்படும் நாடகங்களாகும்.

காட்சி அமைப்பையும் காண்போரையும் மனத்துள் கொள்ளாமல் மொழிநடைக்கும் கருத்துக்கும் மட்டுமே முன்னுரிமை தந்து எழுதப் பெறும் நாடகங்களை அரங்கேற்ற முடியாது. இவற்றைப் படித்து மட்டுமே இன்புறலாம்.

மொழிநடைக்கும் முதன்மை தந்து, காட்சி அமைப்பையும் முன்னிறுத்தி எழுதப்படும் நாடகங்களைக் கண்டு மகிழ்வதுடன் கற்றும் மகிழலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக