திங்கள், 2 டிசம்பர், 2013

மாற்றுதிறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


மாற்றுதிறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று நாகப்பட்டினம்,கலெக்டர் முனுசாமி தெரிவித்தார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உதவித்தொகைமாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 2013-14-ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்க தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை முதல்-அமைச்சர் 2 மடங்காக உயர்த்தி அறிவித்துள்ளார். அதன்படி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.1,000-ம், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.3 ஆயிரமும், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.4 ஆயிரமும் உயர்த்தி அறிவித்துள்ளார்.


உரிய சான்றுகளுடன் மேலும் பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.6 ஆயிரமும், தொழிற்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.7 ஆயிரமும் வழங்கப்படுகிறது. மேலும் 75 சதவீதம் பார்வைத்திறன் குறையுடைய 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வாசிப்பாளர் உதவித் தொகையாக ரூ.3 ஆயிரமும், இளங்கலை பட்டம் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரமும், தொழிற்கல்வி மற்றும் பட்டபடிப்பு பயில்பவருக்கு ரூ.6 ஆயிரமும் வாசிப்பாளர் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

2013-14-ம் நிதியாண்டிற்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் கல்வி உதவித் தொகை பெற இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுடைய மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று வருகிற 15-ந் தேதிக்குள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.

தேசிய அடையாள அட்டை இந்த கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ளவர்களுக்கு மதிப்பெண் சான்று தேவையில்லை. தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. 9-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் பயில்பவர்கள் கடந்த கல்வியாண்டின் இறுதி தேர்வில் 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அதற்கான மதிப்பெண் சான்று இணைக்கப்பட வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டு, பாஸ்புத்தக நகல் இணைக்க வேண்டும்.

75 சதவீதம் பார்வைத்திறன் குறைபாடுடைய மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகையோடு வாசிப்பாளர் உதவித்தொகை பெறவும் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக அரசின் வேறு எந்த துறையின் மூலமாகவும் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்திருத்தல் கூடாது.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மூலப் பிரதி: தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு தஞ்சை (2.12.2013)

இந்த செய்தியின் முழு விவரத்தையும் தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும். http://www.tjtnptf.com/2013/12/blog-post.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக